search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
    X
    கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

    இ-பாஸ் விவரங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும்- கலெக்டர் பேச்சு

    பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை மாநில எல்லையில் தீவிரமாக கண்காணித்து, அவர்களுடைய இ-பாஸ் விவரங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை மாநில எல்லையில் தீவிரமாக கண்காணித்து, அவர்களுடைய இ-பாஸ் விவரங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். மாநில எல்லையில் உள்ள 7 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

    சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் பிளிச்சிங் பவுடர், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். நோய் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நடத்திட வேண்டும். மூன்று நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகளை சுற்றி ஒரு கி.மீ சுற்றளவில் தடுப்பு பணிகளையும், கிருமி நாசினி பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும், தற்போது பருவ மழை காலமாக உள்ளதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை படியே மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். மேலும் நன்கு காய்ச்சிய குடிநீரை பொதுமக்கள் உட்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கொரோனா தொற்று குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த கூட்டத்தில், அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் முத்துசெல்வன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரகுகுமார், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ஜெயசங்கர், ஓசூர் மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சந்திரா, மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர். வெங்கடேஷ், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் முத்துமாரியப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தனி தாசில்தார் சத்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×