என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆம்பூர் அருகே அ.ம.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி உள்பட 6 பேர் கைது

    அ.ம.மு.க. பிரமுகரை கூலிப்படை ஏவி கொன்ற மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). அ.ம.மு.க. மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார். இவரது மனைவி ஜெயந்தி (35), இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்

    ரமேஷூம், ஜெயந்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஜெயந்தி ஆம்பூர் அடுத்த சோலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். ஜெயந்தியின் தாய் சரஸ்வதி (65) ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அதே பகுதியில் பாலாற்றிற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் கீழ் ரமேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது தொடர்பாக ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். ரமேஷ் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி ஆகிய 2 பேரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இவர்களது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். அதில் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி மற்றும் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து கூலிப்படை ஏவி ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ரமேஷின் மனைவி ஜெயந்தி, மாமியார் சரஸ்வதி உறவினர்களான மிட்டாளத்தை சேர்ந்த கவுதம் (20). ரங்காபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தனுஷ்ராஜ் (23) மேலும் கூலிப்படையான மிட்டாளத்தை சேர்ந்த ராமன் (23), செதுவாலையை சேர்ந்த விக்னேஷ்(26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதமே கார் விபத்து ஏற்படுத்தி ரமேசை கொலை செய்ய திட்டமிட்டு ரமேஷ் மீது காரை ஏற்றினர். ஆனால் ரமேஷ் அதிலிருந்து தப்பித்து விட்டார்.

    அதன்பின்னர் கடந்த 28-ந்தேதி ரமேசை மது குடிக்க அழைத்து சென்று போதை தலைக்கேறியதும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து பாலத்தின் கீழ் பிணத்தை வீசி சென்றனர்.

    கொலையான ரமேஷின் மனைவி ஜெயந்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் ரமேஷ் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். சரிவர வேலைக்கு செல்வதில்லை. குடித்து விட்டு என்னை அடித்து கொடுமைப்படுத்துவார்.

    எனது சம்பள பணத்தையும் எடுத்து கொள்வார். செல்போன் அழைப்பு வந்தாலும் சந்தேகப்பட்டு ஆபாச வார்த்தையில் பேசுவார்.

    குடிபோதையில் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார். இதனால் அவரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×