search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் குண்டுசாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை கலெக்டர் பார்வையிட்ட காட்சி
    X
    கடலூர் குண்டுசாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியை கலெக்டர் பார்வையிட்ட காட்சி

    கடலூரில், மழைநீர் வடிகால் அமைக்க இடையூறு: ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு

    கடலூரில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் நகராட்சி பகுதியில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    அதன்படி நேற்று அவர் கடலூர் அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது இந்த பணிக்கு இடையூறாக குடிநீர் குழாய்கள், தொலைதொடர்பு கேபிள்கள் சென்றது. இதை பார்த்த அவர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி, உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்.

    தொடர்ந்து குண்டுசாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்ட கலெக்டர், அதில் சில வியாபார நிறுவனத்தினர் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். அதேபோல் சண்முகம் பிள்ளை தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தாசில்தார், நில அளவையர்கள் சேர்ந்து அளவீடு செய்து, அகற்ற உத்தரவிட்டார்.

    இதையடுத்து அந்த பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் புதைவட கேபிள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மின்சார வாரியத்திடம் தகவல் தெரிவித்து மூட நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் பணி செய்வதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கிருமி நாசினி தெளிக்கும் பணியை காலை 5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் 7 மணி வரையிலும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்

    ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) புண்ணியமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×