search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டரிடம், மீனவர்கள் சுருக்குமடி வலைகளை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த போது எடுத்த படம்.
    X
    கலெக்டரிடம், மீனவர்கள் சுருக்குமடி வலைகளை ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்த போது எடுத்த படம்.

    தடை உத்தரவு எதிரொலி: 43 சுருக்குமடி வலை, படகுகளை கலெக்டரிடம் ஒப்படைத்த மீனவர்கள்

    தடை உத்தரவு எதிரொலியாக 43 சுருக்குமடி வலைகள், படகுகளை மாவட்ட கலெக்டரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர். மேலும் மாற்று வாழ்வாதார திட்டத்தில் பயன்பெற விருப்பம் தெரிவித்து மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 57.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரை மற்றும் 49 மீனவ கிராமங்களை கொண்டது. இவற்றில் சுமார் 49 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இதில் 24 ஆயிரத்து 480 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலும், 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 250 மீன்பிடி விசைப்படகுகளும், 2 ஆயிரத்து 950 எந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப்படகுகளும், 868 நாட்டுப்படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இருப்பினும் சில மீனவர்கள் சுய நலத்துடன் சுருக்குமடி வலைகளை கொண்டு ஒரே நேரத்தில் அதிகளவில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்பாட்டினை தடுத்திடும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் சப்-கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

    இக்குழுவினர் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளை கண்காணித்து, களஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர். இது தவிர தமிழக அரசு வழங்கும் மாற்று வாழ்வாதார திட்டங்களான, 40 சதவீத மானியத்துடன் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்படும், 50 சதவீத மானியத்துடன் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு திட்டத்தின் கீழ் செவுள்வலை மற்றும் தூண்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலை படகுகளை ரூ.15 லட்சம் மானியத்துடன் செவுள் வலை படகுகளாக மாற்றும் திட்டம் பற்றியும் கூறப்பட்டது.

    இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களில் உள்ள சுருக்குமடி வலை படகுகளில் முதற்கட்டமாக ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான 19 சுருக்குமடி வலை படகுகள் (ஒரு படகின் தோராய மதிப்பு ரூ.35 லட்சம்) மற்றும் ரூ.7 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 24 சுருக்குமடி வலைகளையும் (ஒரு சுருக்குமடி வலையின் தோராய மதிப்பு ரூ.30 லட்சம்) ஆக மொத்தம் ரூ.13 கோடியே 85 லட்சம் மதிப்பிலான படகு மற்றும் வலைகளை நேற்று சோனாங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அரசிடம், அதாவது மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியிடம் ஒப்படைத்தனர். இதை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தனர்.

    அப்போது மாற்று திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் பயன் பெற உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மற்ற மீனவர்கள் பயன்படுத்தும் சுருக்குமடி வலைகளையும் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதை கேட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரம்யா லட்சுமி, ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×