search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காதல் திருமணம் செய்த பெண் குத்திக்கொலை - கணவர் உள்பட 2 பேர் கைது

    பவானிசாகர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவருடைய கணவரே குத்திக்கொலை செய்தார். இதுதொடர்பாக கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வீரமணிகண்டன் (வயது 28). எலக்ட்ரீசியன்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் சாஸ்தாமூர்த்தி. இவருடைய மகள் பவித்ரா (23). வீரமணிகண்டனும், பவித்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், கைக்குழந்தையும் உள்ளது.

    கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதில் பவித்ரா தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    வீரமணிகண்டன் தன்னுடைய குழந்தையை கொடுக்குமாறு கேட்டு அடிக்கடி பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமணிகண்டன் தனது நண்பரான எரங்காட்டூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பவித்ரா வீட்டுக்கு சென்று உள்ளார்.

    பின்னர் 2 பேரும் சேர்ந்து குழந்தையை கொடுக்குமாறு கேட்டு பவித்ராவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பவித்ராவின் தந்தை சாஸ்தாமூர்த்தி மற்றும் வீரமணிகண்டனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.

    வாய்த்தகராறு முற்றியதில் வீரமணிகண்டன் ஆத்திரம் அடைந்து அருகில் நின்று கொண்டிருந்த பவித்ராவை கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா மயங்கி விழுந்தார். மேலும் சாஸ்தாமூர்த்தி, அவருடைய மனைவி அமுதா (45) மற்றும் பவித்ராவின் பாட்டி சித்தம்மாள் (70) ஆகியோரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு 9 மாத கைக்குழந்தையை வீரமணிகண்டன் மற்றும் ராம்குமார் ஆகியோர் தூக்கி சென்றனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்து கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சாஸ்தாமூர்த்தி, அமுதா, சித்தம்மாள் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணிகண்டன் மற்றும் ராம்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமணிகண்டன் மீது மாமனார் சாஸ்தாமூர்த்தியை கத்தியால் குத்தி கைவிரல்களை காயப்படுத்தியதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதல் திருமணம் செய்த மனைவியை கணவரே குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×