என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
குன்றத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி - தந்தை கண் எதிரே பரிதாபம்
குன்றத்தூர் அருகே தந்தை கண் எதிரே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி:
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்.. கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுஜித்வேலன் (வயது 8). இவன், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வெங்கடேஷ் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் குளிக்கச்சென்றார்.
சுஜித்வேலனை குளிக்க வைத்து கிணற்றின் கரையில் நிறுத்தி விட்டு வெங்கடேஷ் குளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுஜித்வேலன் கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதை பார்த்ததும் அவரது தந்தை வெங்கடேஷ், மகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுஜித்வேலன் கிணற்றில் மூழ்கி விட்டான்.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய அதிகாரி அருள் ஜோதி தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய சிறுவனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஜித்வேலன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






