search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

    செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: சிறுவன் பலி - உறவினர்கள் சாலை மறியல்

    செங்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    செங்கம் துக்காப்பேட்டையில் வசித்து வருபவர் சையத்தாவூத் (வயது 50). இவர், மேல்புழுதியூர் பகுதியில் செருப்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு கடையை பூட்டிவிட்டு அவரது மகன் சையத்பைசலுடன் (13) மோட்டார் சைக்கிளில் துக்காப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    செங்கம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது தர்மபுரி நோக்கி சென்ற மினி வேன் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் வந்த போது திடீரென சையத்தாவூத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சையத்பைசல் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×