search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செல்போன் உயர்கோபுர உதிரி பாகங்களை திருடிய 4 பேர் கைது

    ஈரோட்டில் செல்போன் உயர்கோபுர உதிரி பாகங்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவில் தனியார் செல்போன் உயர்கோபுரம் அமைக்கும் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. அந்த குடோனுக்கு நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ராஜீவ் கடந்த 14-ந் தேதி சென்றார். அப்போது குடோ னின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் குடோனுக்குள் சென்று அவர் பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பேட்டரிகள் உள்பட சுமார் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்கள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜீவ் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடோனில் உதிரிபாகங்களை திருடிய மர்மநபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வீரப்பன்சத்திரம் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சரக்கு ஆட்டோ சென்றது தெரியவந்தது. அதை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாகனத்தில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தனர். வாகனத்தை சோதனையிட்டபோது அதில் செல்போன் கோபுரத்தின் உதிரிபாகங்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டதில் அவர்கள், வீரப்பன்சத்திரம் சு.கா.வலசு பகுதியை சேர்ந்த மாரியப்பனின் மகன் தினேஷ் (வயது 30), சென்னிமலைரோடு முத்துகுமாரசாமி வீதியை சேர்ந்த கோவிந்தனின் மகன் புவனேஸ்வரன் (29), சித்தோடு செங்குந்தபுரத்தை சேர்ந்த தியாகராஜனின் மகன் சரத்குமார் (28), சித்தோடு இந்திராநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35) ஆகியோர் என்பதும், இவர்கள் மாணிக்கம்பாளையத்தில் உள்ள குடோனில் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உதிரிபாகங்களையும், சரக்கு ஆட்டோவையும் போலீசார் மீட்டனர்.

    Next Story
    ×