search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நீலகிரி மாவட்டத்தில் 121 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் 121 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 110-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. பின்னர் மஞ்சூர் அருகே 3 கிராமங்களில் நடந்த 2 திருமண நிகழ்ச்சிகள், ஒரு துக்க நிகழ்ச்சியில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதில் தொற்று உறுதியானவர்கள் பங்கேற்றதால் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    நேற்று முன்தினம் வரை நீலகிரியில் 371 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து வருவதோடு, வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. பாதிக்கப்பட்டவர்களுடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதார குழுவினர் சளி மாதிரி சேகரித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது 121 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் தனிமையில் இருக்காமல் வெளியே சுற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் மொத்தம் 121 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என அறிவிப்பு செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடக் கூடாது. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதேனும் தேவை இருப்பின் அப்பகுதிக்கு என்று ஒதுக்கப்பட்ட அதிகாரியிடம் கூறலாம்.

    மேலும் தன்னார்வலர்கள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். பொருட்கள் வாங்குவதற்கு என்று வெளியே வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கான தேவையை தன்னார்வலர்கள் மூலமாக பூர்த்தி செய்து வைக்கப்படும். வெளியூர்களில் இருந்து முறையாக இ-பாஸ் பெற்று வருபவர்கள் நீலகிரி மாவட்ட எல்லையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் பரிசோதனை முடிவு தெரியும் வரை தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×