search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் அகழாய்வு
    X
    கீழடியில் அகழாய்வு

    கீழடி அகழ்வாராய்ச்சி பணி- கொந்தகை பகுதியில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

    கொந்தகை மற்றும் அதன் எதிரே உள்ள தனியார் நிலத்திலும் சேர்த்து இதுவரை 20 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் ஏற்கனவே நடைபெற்று நிறைவு பெற்றது. தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களிலும் பணி நடைபெற்று வருகிறது.

    கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணியில் பெரிய பானைகள், விலங்கின் எலும்புக்கூடு, 12 வரிசை கொண்ட செங்கல் சுவர், சிறிய பானைகள், வடிகால் பகுதி, இரும்பு உலை, உருண்டை வடிவ எடை கற்கள் கிடைத்தது. கொந்தகை பகுதியில் சுமார் 13-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகளும், மனித கை, கால் எலும்புகள், சிறிய குவளைகள், மனித மண்டை ஓடு, சிறிய எலும்புகள், குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்தது. அகரத்தில் சிறிய பானைகள், நத்தை ஓடுகள், பெரிய பானைகள், சங்கு வளையல்கள், அம்மியின் மேல் காணப்படும் அரவைக்கல், தங்க நாணயம், பாசி, மணிகள் கிடைத்துள்ளது. இதேபோல் மணலூரில் சுடுமண் உலை, பெரிய மனித எலும்பு, சிறிய எலும்பு, செங்கல் திட்டு ஆகியவைகளும் கண்டெடுக்கப்பட்டது.

    நேற்று கொந்தகை பகுதியில் புதிய குழிகள் தோண்டி அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது அதில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு ஒன்று காணப்பட்டது. மேலும் அதை அகலமான அளவில் தோண்டப்பட்டு ஆராய்ச்சி பணிகள் செய்தால் தான் அதன் முழு உருவமும் தெரியவரும். அதன் பின்னர் அந்த முதுமக்கள் தாழிக்குள் இருக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி நடைபெறும். கொந்தகை மற்றும் அதன் எதிரே உள்ள தனியார் நிலத்திலும் சேர்த்து இதுவரை 20 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×