search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஒருவருக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கியபோது எடுத்தபடம்
    X
    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஒருவருக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கியபோது எடுத்தபடம்

    ஊட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

    ஊட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகல்கோடு மந்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து கிராம அளவிலான சமூக விழிப்புணர்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இன்கோசர்வ் தலைமை செயல் அதிகாரியும், நீலகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி தோடர் இன மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து கிராம மக்களை சென்றடைய கிராம ஊராட்சி அளவிலான சமூக விழிப்புணர்வு கூட்டம் என்ற முறை நீலகிரியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பழங்குடியின கிராமங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது கிராம அளவில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

    முகக்கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, கிருமி நாசினி உபயோகிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்றவை முக்கிய அம்சங்களாகும். அந்தந்த பகுதி கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்று வரும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். தங்கள் கிராமத்துக்கு வெளிமாவட்ட, வெளிமாநிலங்களில் இருந்து யாரேனும் வருகை புரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர், இணை நோய்களை உடையவர்களுக்கு கபசுர குடிநீர், வைட்டமின் சி மாத்திரைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.

    கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வெளியிடங்களில் இருந்து வருகை தருபவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×