search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அன்னவாசல் அருகே குளத்தில் மூழ்கி தந்தை-மகன் பலி

    அன்னவாசல் அருகே குளிக்கச்சென்ற தந்தையும், மகனும் மலையடி குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது(வயது 40). இவர் அன்னவாசலில் சம்சா கடை நடத்தி வந்தார். இவரது மகன் முகமதுசாலிக்(9). இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று மாலை சாகுல்ஹமீது, முகமதுசாலிக்குடன் சித்தன்னவாசல் அருகே உள்ள பணங்குடி மலையடியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றனர்.அங்கு அவர்கள் துணிகளை துவைத்து கரையில் வைத்துவிட்டு, மலையடி குளத்தில் குளிக்க இறங்கினர். அப்போது அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பணங்குடி மலையடி குளத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு துணிகள், வாளி, செருப்பு உள்ளிட்டவை மட்டுமே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மலையடியை சுற்றி பார்த்தும், அவர்கள் கிடைக்கவில்லை.

    பின்னர் சாகுல்ஹமீதின் உடல் மட்டும் தண்ணீரில் மிதந்தது. இதைக்கண்ட உறவினர்கள் அன்னவாசல் போலீசாருக்கும், சிப்காட் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் குளிக்க சென்ற சாகுல்ஹமீதும், முகமது சாலிக்கும் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரில் இறங்கி சாகுல்ஹமீதின் உடலை மீட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அன்னவாசல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் முகமது சாலிக்கின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். குளத்தில் மூழ்கி தந்தை-மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த மலையடி குளத்தில் பலர் இறந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக கம்பி வேலி அமைத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×