search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- ஓட்டல் உரிமையாளர் கைது

    கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டிய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் தனபால்(வயது 50). அதே கிராமத்தை சேர்ந்த இவரின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி(46) சென்னையில் ஓட்டல் நடத்தி வந்ததால் அவரின் கடையில் தனபால் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் கிருஷ்ணமூர்த்தியின் கடையில் வேலையை விட்டுவிட்டு வேறொரு கடையில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா ஊரடங்கு அறிவித்தபின் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தனபால் இருவருமே சொந்த ஊரான அருங்காலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அன்றிரவே தனபால் வீட்டிற்குள் புகுந்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது அரிவாளால் வெட்ட முற்பட்டுள்ளார். இதில் திடுக்கிட்டு எழுந்த தனபால் அதை தடுக்க முயன்றபோது கை மற்றும் வயிற்று பகுதியில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு கூச்சலிட்டுள்ளார். உடனே கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தனபாலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கீழப்பழுவூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
    Next Story
    ×