search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கா?- நாராயணசாமி பதில்

    தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது தொடர்பாக அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. புதுவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த நிலையில் புதுவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினம் நிறைய சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடர்பான தகவல் சுப நிகழ்ச்சிகள் நடத்த உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ நிருபரிடம் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ‘ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில் முழு ஊரடங்கு வேண்டாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முழு ஊரடங்கு தொடர்பாக அரசு சார்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு ஏதேனும் முடிவெடுத்தால் அரசு உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கும்’ என்றார்.
    Next Story
    ×