search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    புறவழிச்சாலை, ரெயில்வே மேம்பால பணிக்கு ரூ.129¼ கோடி ஒதுக்கீடு- கலெக்டர் தகவல்

    குடியாத்தம் புறவழிச்சாலை, வல்லம் ரெயில்வே மேம்பால பணிக்கு ரூ.129¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மற்றும் குடியாத்தம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் முதல் கட்டமாக குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மங்களுரு-வேலூர் தேசிய நெடுஞ்சாலை சுமார் 7.1 கிலோ மீட்டர் நீளத்தில் குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்கும் பொருட்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நில எடுப்பு பணிக்காக ரூ.36 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாலையானது நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம் மற்றும் சேத்துவண்டை ஆகிய கிராமங்களின் வழியே அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பேரணாம்பட்டில் இருந்து வரும் வாகனங்கள் குடியாத்தம் நகருக்கு செல்லாமலேயே நேரடியாக காட்பாடி சாலை வழியாக செல்லலாம். இதனால் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

    இந்த திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக 6 கிராமங்களில் தேவைப்படும் நிலங்கள் இறுதி செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்கனவே மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நில உரிமையாளர்களுடன் இதுதொடர்பாக கூட்டம் நடத்தி அதன் தொகை இறுதி செய்யப்படும்.

    அதைத்தவிர, வேலூர்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை-38 வல்லம் கிராமம் அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக 4 வழிச்சாலையுடன் கூடிய புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிக்காக ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயில்வே மேம்பாலமானது வல்லம் மற்றும் கீழ்பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே அமையும். இதன் மூலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சாலை போக்குவரத்து தங்கு தடையின்றி செல்லலாம். இந்த திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக 2 கிராமங்களிலும் தேவைப்படும் நிலங்கள் இறுதி செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்கனவே மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பகுதியில் பொதுமக்களின் வீடுகள், கட்டிடங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×