search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யோகா பயிற்சி
    X
    யோகா பயிற்சி

    கொரோனா தொற்று பாதித்தவர்களின் மனஅழுத்தத்தை குறைக்க யோகா

    வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பாதித்த நபர்களின் மனஅழுத்தத்தை குறைக்க சித்தமருத்துவத்துறை சார்பில் யோகா சொல்லி கொடுக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 மருத்துவமனைகளிலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 939 பேர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் கொரோனாவினால் அனுமதிக்கப்படும் 40 வயதுக்கு குறைவான நபர்கள், முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கல்லூரியில் 72 பேர் உள்ளனர்.

    கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை கொடுக்கும்படி மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ டாக்டர்கள் கொரோனா பாதித்த நபர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் தினமும் வழங்கி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளை வழங்க பரிந்துரைக்கிறார்கள்.

    இந்த நிலையில் தந்தை பெரியார் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் மனஅழுத்தத்தை குறைக்க யோகா கற்று கொடுக்கப்பட்டது. வேலூர் மாவட்ட சித்தமருத்துவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யோகா பயிற்றுனர் மீரா நேற்று கல்லூரியில் உள்ள 72 நபர்களுக்கும் பல்வேறு கட்டங்களாக மூச்சுபயிற்சி, மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி போன்ற யோகாசனம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு மன அழுத்த்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக ஆலோசனை (கவுன்சிலிங்) அளிக்கப்பட்டது. யோகா பயிற்சி ஒருவாரம் அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து வேலூர் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் சுசி கண்ணம்மா கூறுகையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே யோகா சொல்லி கொடுக்கப்பட்டது. தற்போது வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக தந்தை பெரியார் கல்லூரியில் யோகா டாக்டர் மூலம் மனஅழுத்தத்தை குறைக்க யோகா அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×