search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

    வெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும்- நாராயணசாமி

    வெளியூரில் இருந்து வருபவர்கள் பற்றி அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு சோதனை நடத்த உள்ளோம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் உணவு சரியாக வழங்கவில்லை என்று புகார் வந்துள்ளது. அதனை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இன்று (வெள்ளிக்கிழமை) பேரிடர் மீட்பு துறையின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கூனிச்சம்பட்டு பகுதியில் 70 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் மூலம் அதிக அளவில் தொற்று பரவியுள்ளது. இதுதொடர்பாக அந்த தொழிற்சாலை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதிய பரிசோதனை வழிமுறைகளை ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ளது. அதாவது ஆண்டிஜன் முறையில் மருத்துவ சோதனை நடத்தினால் 30 நிமிடத்தில் தொற்று பாதிப்பினை கண்டறிய முடியும். இதற்கான செலவு ரூ.450 மட்டுமே. இந்த முறை மூலம் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தொற்றை கண்டறிய நடமாடும் மருத்துவமனைகள் மூலம் சோதனை நடத்தப்பட உள்ளது.

    புதுவையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடைகளை விரைவாக மூடுவதால் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. கடைகள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பற்றி தெரியவந்தால் அந்த விவரங்களை அக்கம்பக்கத்தினர் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 19 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதனால் லாரி வாடகையும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுமைகள் பொதுமக்கள் மீது விழுந்துள்ளன. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு ஏற்கனவே நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதங்களுக்கான இலவச அரிசியை வழங்கியுள்ளது. தற்போது மக்கள் பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். எனவே அடுத்து வரும் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×