search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரோன் குளித்த கிணற்றை சுற்றி பொதுமக்கள் திரண்டு நின்ற காட்சி
    X
    சாரோன் குளித்த கிணற்றை சுற்றி பொதுமக்கள் திரண்டு நின்ற காட்சி

    ஆவூர் அருகே கழுத்தில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி

    ஆவூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குதித்து குளித்த கல்லூரி மாணவர் கழுத்தில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.
    ஆவூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கீழபச்சகுடி கிராமத்தை சேர்ந்தவர் சாலமன். விவசாயி. இவருடைய மகன் சாரோன் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்க கல்லூரி மூடப்பட்டு உள்ளதால் வீட்டில் இருந்து வந்த சாரோன், பக்கத்து கிராமமான மதயானைபட்டியில் உள்ள ஒரு கிணற்றில் தனது நண்பர்களுடன் அவ்வப்போது வந்து குளித்துவிட்டு செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அந்த கிணற்றுக்கு சாரோன் குளிக்க சென்றார். சுமார் 40 அடிக்கு கீழே தண்ணீர் உள்ள அந்த கிணற்றில் முதலில் சாரோன் குதித்துள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் ஒவ்வொருவராக குதித்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருவர் சாரோனின் கழுத்தில் குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் கழுத்தில் அடிபட்டு மயங்கிய அவர் தண்ணீரில் மூழ்கினார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கிணற்றில் இருந்து மேலே வந்து அருகில் இருந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி சாரோனை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சாரோன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×