என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்
    X
    கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

    புதுக்கோட்டையில் மேலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைப்பு- கலெக்டர் தகவல்

    சென்னையில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும், மேலும் 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.

    கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    மாவட்டத்தில், பொதுஇடங்கள் மற்றும் போக்குவரத்தின்போது பொதுமக்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். ஊராட்சி பகுதிகளிலும் இது பொருந்தும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முதல் தடவை அபராதம் விதிக்கப்படும்போது இலவசமாக ஒரு முக கவசம் கொடுக்கப்படும். மீண்டும் முக கவசம் அணியாமல் வந்தால் பொது சுகாதார சட்டத்தின் கீழ் போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்படும்.

    இ-பாஸ் குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டும்தான் அனுமதிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் நபர்கள் ஒவ்வொரு சோதனை சாவடியிலும் துணை கலெக்டர் நிலையில் அலுவலர் தலைமையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் 10 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது கூடுதலாக கட்டுமாவடி, விராலிமலை, ஆவணம் கைகாட்டி ஆகிய 3 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முறையாக இ-பாஸ் அனுமதியில்லாமல் வரக்கூடிய நபர்கள் மற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் தற்போது இயக்கப்படும் 50 சதவீத பஸ்களுடன் கூடுதலாக பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மலர்விழி, பொது சுகாதார துணை இயக்குனர்கள் அர்ஜுன்குமார், கலைவாணி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×