search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடல் சீற்றம்
    X
    கடல் சீற்றம்

    வங்கக்கடலில் புயல்- மாமல்லபுரத்தில் பலத்த கடல் சீற்றம்

    வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவாகி இருப்பதால் மாமல்லபுரத்தில் நேற்று பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டது.

    அதிகாலை முதல் கடல் சீற்றமாக இருந்ததால் மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுஎடையூர்குப்பம், வெண்புருஷம், தேவனேரி, பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதிகாலை கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களும் கடல் சீற்றம் காரணமாக படகில் பத்திரமாக கரை திரும்பினர்.

    கடலுக்கு செல்லாத மீனவர்கள் சிலர் கரையில் இருந்து கடலில் தூண்டில் போட்டு மீன்கள் பிடித்தனர். 10 அடி உயரத்துக்கு ராட்சத அலை கரைப்பகுதி வரை சீறி எழும்பி வந்தன. மாமல்லபுரம் கடற்கரையில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மாமல்லபுரம் நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக கடலுக்கு செல்லாமல் இருந்த மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு சென்று வந்தனர். தற்போது புயல், பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லாததால் போதிய வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

    ஒரு புறம் கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொரு புறம் அடிக்கடி புயல், கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரிடரால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
    Next Story
    ×