search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று பரிசோதனை
    X
    கொரோனா தொற்று பரிசோதனை

    அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா - பெரம்பலூரில் பாதிப்பு இல்லை

    அரியலூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 348 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலனோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டி லிருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களில் அரியலூர் மாவட்டத்தில் 329 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருந்ததால் பொதுமக்கள் சற்று நிம்மதியாக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் பொய்யாதநல்லூர், ராயபுரம், பெரியதிருக்கோணம், முனியங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதால் மீண்டும் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 5 பேரும் கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். அவர்கள் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 348-ல் இருந்து 353 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் 13 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் 139 பேரில், 95 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலவே, நேற்றும் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாததால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 கர்ப்பிணிகள் உள்பட 48 பேருக்கும் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
    Next Story
    ×