search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளரிக்காய்
    X
    வெள்ளரிக்காய்

    விளைந்த வெள்ளரிக்கு விலை கிடைக்கவில்லை- விவசாயிகள் வேதனை

    ஊரடங்கு காரணமாக விளைந்த வெள்ளரிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடைக்காலத்தை முன்கூட்டியே கணக்கிட்டு விவசாயிகள் தங்களது நிலத்தில் வெள்ளரி விதையை அதிகஅளவில் விதைப்பு செய்தனர். தற்போது அவை அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பி வைக்கும் நிலையில் உள்ளது.

    சிவகங்கையை அடுத்த இடையமேலூர் பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று பாசனம் மூலம் வெள்ளரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது இந்த வெள்ளரி விளைந்து அறுவடை செய்யும் நேரத்தில் இரவு நேரங்களில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் காட்டு விலங்கு மற்றும் பறவைகள் வெள்ளரியை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் வெள்ளரி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

    இதுகுறித்து சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் வெள்ளரி சாகுபடி செய்துள்ள விவசாயி பூச்சி கூறியதாவது:- 

    ஆண்டுதோறும் கோடைக்காலத்தை கணக்கிட்டு குறைந்த செலவில் அதிக லாபத்தை தரும் வெள்ளரி சாகுபடியை மேற்கொண்டு வருகிறோம். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்து 40 நாட்கள் பராமரிப்பு செய்தாலே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

    தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் இரவு நேரத்தில் இந்த பகுதியில் சுற்றித்திரியும் முயல்கள் மற்றும் பகல் நேரத்தில் திரியும் மைனா உள்ளிட்ட பறவைகள் இந்த வெள்ளரிக்காயை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கினால் போக்குவரத்து இல்லாமல் விற்பனைக்கு வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாமல் உள்ளது. இதனால் வெள்ளரிக்காயை உள்ளூர் பகுதியில் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம்.

    தற்போது இந்த பகுதியில் 1 வெள்ளரிக்காய் ரூ.1-க்கு தான் வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர். இதனால் இந்த ஆண்டு செலவு செய்த தொகைகூட கிடைக்காத நிலையில் உள்ளோம். வெள்ளரி சாகுபடியால் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×