என் மலர்

  செய்திகள்

  மதுரை மாவட்டம்
  X
  மதுரை மாவட்டம்

  மதுரையில் 3-ந்தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் 3-ந் தேதி வரை நிலவும் கொரோனா தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கில் மாற்றம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
  மதுரை:

  உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சி பகுதிகளில் வருகிற 29-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலே முடங்கி உள்ளனர்.

  நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காணப்படுகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 நாட் கள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று தமிழகத்தில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னை, மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை.

  இதனால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கி இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே மதுரையில் கொரோனாவுக்கு இதுவரை 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளில் கிருமி நாசினிகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

  பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

  மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மதுரையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தாக்கம் அடுத்த சில நாட்களில் கணிசமாக குறைய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  மதுரையில் முழு ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 30-ந் தேதி முதல் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் செய்து வருகிறது.

  பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி சந்தைகள், இறைச்சிக்கடைகள், மளிகைக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், நெரிசல் அதிகம் காணப்படும் காய்கறி மார்க்கெட்டுகளை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யவும் அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

  முழு ஊரடங்கு முடியும்போது கொரோனா தாக்கம் மதுரையில் எதிர்பார்த்த அளவு குறையும் என்று கணிக்கப்படுகிறது. இதனிடையே மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்துள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் தற்போது முழு ஊரடங்கு காரணமாகவும், நெரிசலை தவிர்க்கவும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

  பரவையில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து காய்கறிகளை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் தேவைகளுக்கு பரவை மார்க்கெட் மட்டும் போதாது.

  அங்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், வியாபாரிகள் அதிகளவில் வருவதால் நெரிசல் ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டை மதுரையின் வெளிப்பகுதிகளில் ஐந்து இடங்களில் தற்காலிகமாக அமைக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

  இதற்காக ஒத்தக்கடை விவசாய கல்லூரி மைதானம், ரிங் ரோடு அம்மா திடல், மண்டேலா நகர் சந்திப்பு, மன்னர் கல்லூரி மைதானம், திருப்பாவை யாதவர் ஆண்கள் கல்லூரி உள்ளிட்ட இடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

  இதுதொடர்பாக சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளுடன் கலெக்டர் வினய், மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிற 30-ந் தேதி முதல் தற்காலிக இடங்களில் மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் மக்கள் அதிகம் கூடும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், நியாய விலைக்கடைகளிலும் சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,

  வருகிற 3-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற பரபரப்பும் அச்சமும் மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. மதுரையில் 3-ந் தேதி வரை நிலவும் கொரோனா தாக்கத்தை பொறுத்தே ஊரடங்கில் மாற்றம் ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

  கொரோனா தாக்கம் குறையும்பட்சத்தில் 3-ந் தேதிக்கு பிறகு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், அதே வேளையில் கொரோனா தாக்கம் குறையாவிட்டால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  எனவே ஊரடங்கு தளர்த்தப்படுவதும், நீட்டிக்கப்படுவதும் மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பில் தான் இருக்கிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

  எனவே பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைப்பிடித்து முழு ஊரடங்கை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டினால் மதுரையில் கொரோனா தாக்கம் நிச்சயம் குறையும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகவும், வேண்டுதலாகவும் உள்ளது.

  Next Story
  ×