என் மலர்
செய்திகள்

கொரோனாவை கண்டு பயந்தால் அதுவே நம்மை கொன்றுவிடும்- குணமடைந்த பெண்ணின் டிக்டாக் வீடியோ
செந்துறை:
அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி சென்னை வேளச்சேரி ஷாப்பிங் மாலில் வேலை பார்த்த பூஜா என்கிற தேன்மொழி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது ரத்த பரி சோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர் டிக்டாக் பதிவிடுவதில் ஆர்வம் உள்ளவர். இந்த நிலையில் அவர் மருத்துவ மனையின் கொரோனா வார்டில் வேலை செய்த 3 சுகாதார பணியாளர்களிடம் தனது டிக்டாக் பதிவுகளை கொடுத்து பார்க்க கூறினார். இதனால் அந்த 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கொரோனா தொடர்பாக டிக்டாக் கில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இது சமூக வலை தளங்களிலும், மீடியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகமே கொரோனாவை கண்டு அஞ்சிய நிலையில் இவர் மட்டுமே மிகவும் ஜாலியாக டிக்டாக் செய்து கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு 28 நாட்கள் நிறைவடைந்த நிலையில் பூரண குணமடைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவ மனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இஸ்லாமியர் அப்துல் ரஹீம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.
இதற்கிடையே டிஸ்சார்ஜ் ஆன பூஜா வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோவில், அரியலூர் டாக்டர்கள், காவல் துறையினர் மற்றும் நர்சுகள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் இன்றி இருக்க வேண்டும். பயந்தால் கொரொனா நம்மை கொன்று விடும். தைரியமாக இருந்தால் நாம் கொரோனாவை நமது நாட்டை விட்டு விரட்டி விடலாம்.
ஆகையால் அனைவரும் அரசுக்கும், டாக்டர்களுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார். கொரோனா வார்டில் தனிமையை போக்க ஓவியம் வரைதல், ஸ்வெட்டர் பின்னுதல் உள்ளிட்ட பயனுள்ள வேலைகளில் ஈடுபட்டு தனிமையை பயனுள்ள வகையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.






