என் மலர்
செய்திகள்

விருதுநகர்-சிவகங்கை வழியாக நெல்லை-தாம்பரம் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை:
நெல்லை-தாம்பரம் இடையே சிவகங்கை, விருதுநகர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை-தாம்பரம் இடையே அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06036) இயக்கப்படுகிறது.
இது நெல்லையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இதேபோல் தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை வெள்ளிக் கிழமை தோறும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்.06035) இயக்கப்படுகின்றன.
இது அன்றைய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 11 மணிக்கு நெல்லை செல்லும்.
மேற்கண்ட ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறப்பட்டுள்ளது.






