search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஊட்டியில் கடும் உறைபனி- பொதுமக்கள் அவதி

    ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    ஊட்டி, ஜன.12-

    நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை மற்றும் பகல் நேரங்களிலும் வெப்பநிலை குறைந்து குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிக்கின்றனர்.

    மேலும் வெளியில் செல்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சுவர்ட்டர் அணிந்து கொண்டு செல்கின்றனர்.

    தற்போது உறைபனியும் கொட்ட தொடங்கி உள்ளதால் இரவு நேரங் களில் கடுங்குளிர் நிலவுகிறது.

    பொதுமக்கள் குளிரில் இருந்து தப்பித்து கொள்ள தீ முட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். உறைபனி கொட்டி வருவதால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே உள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரைப்பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிற்கும் வாகனங்கள், புல்வெளிகள் மீது உறைபனி படர்ந்து ரம்மியமாக காணப்படுகிறது.

    இது அந்த வழியாக நடந்து செல்பவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. இதனை அவர்கள் தங்கள் செல்போனில் போட்டோ பிடித்து செல்கின்றனர்.

    தொடர்ந்து உறைபனி கொட்டி வருவதால் மலைக்காய்கறிகள், தேயிலை செடிகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். இன்று காலை கடுமையான குளிர் உள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.

    பனிப்பொழிவால், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகா பகுதிகளில் உள்ள பல தேயிலை தோட்டங்கள் கருகியுள்ளன. நீலகிரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 368 ஏக்கர் பரப்பில், தேயிலை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மகசூல் குறைந்துள்ளது.

    தற்போது ஊட்டியில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது.

    Next Story
    ×