search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இளம்பெண் கொலை - ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

    வேலூர் மலையில் 80 அடி பள்ளத்தில் தள்ளி இளம்பெண்ணை தள்ளி கொலை செய்தது எப்படி என்பது குறித்து ஆட்டோ டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த சரவணன் மகள் நிவேதா (வயது17). பிளஸ்-2 படித்த இவர் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் உள்ள கேன்டீனில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி பைக்கில் வேலைக்கு சென்ற நிவேதா மாயமானார். இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் புதுவசூர் மலையில் உள்ள கல்குவாரியில் நிவேதா பிணமாக கிடந்தார். அவரது கைகளில் இருந்த பச்சை அடையாளங்கள் மூலம் நிவேதா என்பது உறுதிசெய்யப்பட்டது.

    சம்பவ இடத்தில் நிவேதாவின் செல்போன், பைகள் இல்லை.

    நிவேதாவின் செல்போனில் அதிகம் பேசியவர்கள் யார்? வாட்ஸ் அப் நண்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர்.

    இதில் ரங்காபுரம் மூலக்கொல்லை தென்றல் நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பிரகாஷ் (23). இளம்பெண்ணுடன் அதிகம் பேசியது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

    அப்போது பிரகாஷ் நிவேதாவை 80 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஆட்டோ டிரைவர் நவீன்குமார் (20) அவருக்கு உதவியுள்ளார். 2 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    நிவேதாவின் காதலன் பிரகாஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிவேதா ரங்காபுரத்தில் உள்ளஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது எனது ஆட்டோவில் அடிக்கடி வந்து சென்றார். எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதால் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டோம். தொடர்ந்து பேசியதால் காதல் ஏற்பட்டது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். இந்த நிலையில் அவரது நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவளை திருமணம் செய்யும் எண்ணத்தை கைவிட்டேன்.

    காதலிக்க தயார், திருமணம் செய்ய முடியாது என்ற நிலையில் இருந்தேன். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிவேதா என்னை வற்புறுத்தினாள். சம்பவத்தன்று தனிமையில் சந்திக்க முடிவு செய்தோம்.

    இதற்காக நிவேதாவை புதிய பஸ் நிலையத்திற்கு வரவழைத்தேன். அங்கிருந்து ஆட்டோவில் புதுவசூர் மலைக்கு அழைத்து சென்றேன். தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது திருமணம் செய்ய வேண்டுமென வற்புறுத்தினாள்.

    இதனால் ஆத்திரத்தில் அவளை கழுத்தை நெரித்து 80 அடி பள்ளத்தில் தள்ளி விட்டேன். பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள்.

    இதனால் போலீசில் இருந்த தப்பிக்க முடிவு செய்தேன். இதுபற்றி எனது நண்பன் நவீன்குமாரிடம் தெரிவித்தேன். அவன் வந்ததும் நிவேதாவின் செல்போனை கல்குவாரி குட்டையில் வீசினேன்.

    அவரது பையை செங்காநத்தம் மலையில் வீசி எறிந்து விட்டு வந்துவிட்டோம்.

    இவ்வாறு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கொலை நடந்த இடத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு பிரகாஷ் நிவேதாவை 80 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டது எப்படி என நடித்து காட்டினார்.

    மேலும் அவர் வீசிய செல்போன் கல்குவாரி குட்டை தண்ணீரில் ஆழமான பகுதியில் கிடப்பதால் அதனை எடுக்க முடியவில்லை. செங்காநத்தம் மலையில் நிவேதாவின் பையை மீட்டனர்.

    கைதான பிரகாஷ், நவீன்குமார் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×