search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்கள் போராட்டம்
    X
    பொதுமக்கள் போராட்டம்

    தரமான தார்சாலை அமைக்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    காசான் கோட்டையில் தரமான தார்சாலை அமைக்கக்கோரி லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் சுத்தமல்லியில் இருந்து காசான்கோட்டை வழியாக ஸ்ரீபுரந்தான் வரை உள்ள 9 கிலோ மீட்டர் மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு அரசு சார்பில் ஏலம் விடப்பட்டு ஒப்பந்ததாரர் மூலம் வேலை நடைபெற்று வருகிறது. 

    இந்நிலையில் காசான்கோட்டையில் உள்ள தெரு வழியாக செல்லும் சாலையில் மேடு, பள்ளங்கள் அதிகமாக இருப்பதாகவும், அதோடு சாலையை மேடு படுத்தி சாலையின் இருபக்கங்களிலும் வடிகால் வசதி செய்துகொடுத்து, பின்பு சாலை அமைக்கும்படி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் காசான்கோட்டை கிராம மக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரமான தார்சாலை அமைக்கக்கோரி காசான்கோட்டை வழியாக சாலை அமைக்கும் பணிக்கு ஜல்லிக்கற்களை ஏற்றிச்சென்ற ஒப்பந்ததாரருக்கு சொந்தமான லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×