search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சய்தத்திற்கு வெங்காய மாலை அணிவிக்கப்பட்ட போது எடுத்த படம்.
    X
    சஞ்சய்தத்திற்கு வெங்காய மாலை அணிவிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந்தேதி காங்கிரஸ் சார்பாக டெல்லியில் பேரணி- சஞ்சய்தத்

    மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந்தேதி காங்கிரஸ் சார்பாக டெல்லியில் பேரணி நடக்கிறது என்று அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். வி.பி.துரை முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய மந்திரி தனு‌‌ஷ்கோடி ஆதித்தன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அப்போது, சஞ்சய்தத்திற்கு வெங்காய மாலை அணிவிக்கப்பட்டது.

    மத்திய அரசின் பொருளாதார சீர்கேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். வருகிற 14-ந் தேதி டெல்லியில் மத்திய அரசின் பொருளாதார சீர்கேட்டையும், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன பேரணி நடக்கிறது. இதில் பூத் கமிட்டி அளவில் இருந்து ஒரு நபர் வீதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    பொய் வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்திய பொருளாதாரம் மூழ்கும் கப்பலாக உள்ளது. மோடி அரசின் பொருளாதார சீரழிவால் நாடு பெரிய அழிவை சந்திக்க உள்ளது.

     

    சோனியா காந்தி

    45 ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் மோடி அரசு வரிமேல் வரியை போடுவது தான். சரக்கு சேவை வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மக்களை கொல்லக்கூடிய கேன்சர் நோயை போன்று உள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உள்ளது. விவசாயத்துறை சீரழிந்து விட்டது. இதனால் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு கரைகிறது. வெங்காய விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது.

    சோனியா காந்தி குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சட்டத்தின் படியும், ஜனநாயக முறைப்படியும் தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும். உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×