search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி ைநனார் ஏரியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்த போது எடுத்த படம்.
    X
    ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி ைநனார் ஏரியை கலெக்டர் ரத்னா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    கழுவந்தோண்டி நைனார் ஏரி கரையில் சாலை அமைத்து தரப்படும் - கலெக்டர் ரத்னா தகவல்

    கழுத்தளவு தண்ணீரில் பிரேதத்தை தூக்கி சென்ற சம்பவத்தை தொடர்ந்து கலெக்டர் ரத்னா சம்பந்தப்பட்ட கழுவந்தோண்டி நைனார் ஏரியை ஆய்வு செய்து, ஏரிகரையில் விரைவில் சாலை அமைத்துதரப்படும் என்று கூறினார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதை தொடர்ந்து நைனார் ஏரி நிரம்பியுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கோசலம் (வயது 83) என்ற மூதாட்டி இறந்தார். அவரது உடலை உறவினர்கள் நைனார் ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் தூக்கி கொண்டு மயானத்திற்கு சென்று எரியூட்டினர். இதை அறிந்த அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா நைனார் ஏரி மற்றும் மயானம் செல்லும் பாதை, வடிகால் மதகு உள்ளிட்டவற்றையும், நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் பொதுமக்களிடம் கூறும்போது, மயானம் செல்ல அவ்வழியாக உள்ள ஏரிகரையை பலப்படுத்தி விரைவில் 1 கி.மீ தொலைவிற்கு சாலை வசதி செய்துதரப்படும். வடிகால் மதகுக்கு மேல் பிரேதங்களை கொண்டு செல்ல ஏதுவாக மேம்பாலம் அமைத்து தரப்படும் என்றார்.

    இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் பொதுமக்கள்.

    அப்போது, பொதுமக்கள், வடிகால் மதகில் இருந்து வெளியேறும் தண்ணீர் அணைக்கரை வரை 12 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்திற்கு விவசாயம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வயலுக்கும் நீர்பாசன வாய்க்காலுக்கும் இடையிடையே மதகுகள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அதற்கான ஆய்வு மேற்கொண்டு 12 கிலோமீட்டர் வரை தூரம் உள்ள வாய்க்காலில் இடையிடையே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, மாவட்ட கலெக்டரின் இந்த முடிவு தங்களுக்கு திருப்தி அளிப்பதாகவும், அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.
    Next Story
    ×