search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் பொதுமக்கள்.
    X
    இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் பொதுமக்கள்.

    ஆபத்தான நிலையில் இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம்

    ஜெயங்கொண்டம் அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் ஆபத்தான நிலையில் இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அப்பகுதியில் உள்ள நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று வருகின்றனர். வெயில் காலத்தில் உயிரிழப்பவரின் உடலை அப்பகுதி பொதுமக்கள் நயினார் ஏரியில் இறங்கி எளிதில் எடுத்து சென்று அடக்கம் செய்து வந்தனர்.

    மழைகாலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் நயினார் ஏரியின் வழியாக உடலை எடுத்து செல்ல பாதை அமைத்து தருமாறும் அல்லது மாற்றுப்பாதை அமைத்து தருமாறும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதியினர் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன் தினம் கழுந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கோசலை (வயது 83) என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய கழுவந்தோண்டி நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள், பொதுமக்கள் கொண்டு சென்றனர். அப்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் உறவினர்கள் ஏரியில் இறங்கி கழுத்தளவு மற்றும் மார்பளவு தண்ணீரில் மிதந்தவாறே கோசலையின் உடலை சுமந்துகொண்டு, சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மழைக்காலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை இந்த நயினார் ஏரி வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்வதில் பெரும் சிரமமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரின் உடலை இந்த ஏரியின் வழியாக எடுத்து சென்றபோது மதகு அருகே ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் ஒருவர் மதகில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்டார்.

    இதே நிலை நீடித்து வருவதால் இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் ஒவ்வொருவரின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நயினார் ஏரிக்கரையை பலப்படுத்தி சுடுகாட்டிற்கு செல்லும் வகையில் பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×