search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உப்பு உற்பத்தி
    X
    உப்பு உற்பத்தி

    டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை - வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

    தொடர் மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளங்களில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் உற்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    இலங்கை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று குமரிக்கடல் பகுதி நோக்கி நகர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நாகை மாவட்டம் முமுவதும் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது.

    கனமழை காரணமாக நேற்று மாலை அக்கரைப்பேட்டை திடீர் நகரில் வேல்முருகன் என்ற மீனவரின் சுனாமி நிரந்தர குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த வேல்முருகனின் மனைவி வதனி, மகள் ரித்தியா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

    தொடர் மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளங்களில் மழை தண்ணீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் உற்பத்தி உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி அருகே ராதாநல்லூர் பகுதியில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே செல்லும் மின்கம்பி அறுந்து ரோட்டில் விழுந்து கிடந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் மின்வாரிய ஊழியர்கள் காலதாமதமாக வந்தனர். இதனால் அதுவரை பொதுமக்கள், அறுந்து கிடந்த மின்கம்பி அருகே பாதுகாப்பாக சுற்றிநின்று யாரும் வந்துவிடாதப்படி கண்காணித்தனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து மின்கம்பியை சீரமைத்து சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்தில் இரு தினங்களாக மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக திருவாரூரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்று காலை சிறிது நேரம் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் மழை தூறலாக தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ,பேரளம், பூந்தோட்டம், குடவாசல், திருவாரூர், மாங்குடி, மாவூர், பின்ன வாசல், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், பாபநாசம், பூதலூர், வல்லம், செங்கிப்பட்டி, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.



    Next Story
    ×