search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பேனர் சரிந்து மாணவி பலி எதிரொலி - ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 100 பேனர்கள் அகற்றம்

    பேனர் சரிந்து இன்ஜினீயரிங் மாணவி பலியான சம்பவ்ம் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 100 பேனர்கள் அகற்றப்பட்டனர்.
    ஈரோடு:

    சென்னை பள்ளிக் கரணையில் பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பேனர் விழுந்து லாரியில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி உள்ளது.

    பெண் இன்ஜினியர் சுபஸ்ரீ பலியானது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேனர் விவகாரத்தில் ஏராளமான உத்தரவுகள் புதுப்பிக்கப்பட்டு இருந்தும் அவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்றும் இது தொடர்பாக முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் அனுமதி யின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணி இரவு தொடங்கியது. ஈரோடு மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பிரப் ரோடு, பெருந்துறை ரோடு, ஈரோடு காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்வஸ்திக் கானர், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் உள்பட பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அரசியல்கட்சி பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே முன்வந்து அகற்றினர். ஒரு சில இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

    இதைப்போன்று கோபி பகுதியில் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன் பேரில் நிர்வாகிகள் இரவோடு இரவாக பேனர்களை அகற்றினர். இதேபோன்று பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி , கொடுமுடி, பெருந்துறை உள்பட பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

    நேற்று ஒரே நாளில் இரவு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.
    Next Story
    ×