search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்களாரில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்
    X
    திருக்களாரில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம்

    மன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
    மன்னார்குடி:

    தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடிவரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.

    தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.

    இந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் காவிரி படுகை மண்டல கூட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் முதலில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருக்களார் ஊராட்சி ஆகும்.

    இங்கு கடந்த 14-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட பலர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். அப்போது பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நான்காம் சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியமும் கலந்து கொண்டார்.

    திருக்களாரில் இன்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இதற்கு எதிராக ஓட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். மயிலாடுதுறையில் வருகிற 19-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×