search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி அருகே தோண்ட தோண்ட வரும் பழங்கால சாமி சிலைகள் மீட்பு
    X

    அறந்தாங்கி அருகே தோண்ட தோண்ட வரும் பழங்கால சாமி சிலைகள் மீட்பு

    அறந்தாங்கி அருகே பழங்கால சாமி சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோங்குடி ஊராட்சி மன்றத்திற்கு ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய அலுவலக கட்டிடம் அங்குள்ள சிவன் கோவில் அருகே கட்டப்பட உள்ளது. இதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று தொழிலாளர்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டனர். குழிகள் பாதி தோண்டியபோது மண்ணுக்குள் 2 ½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, அடித்தள பீடம், பலி பீடம் ஆகியவை புதைந்து கிடந்தது. அதனை பார்த்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரகாசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அம்மன் சிலை மற்றும் பீடங்களை மீட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்றும் அதே இடத்தில் கட்டிடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது நேற்று அம்மன் சிலை எடுக்கப்பட்ட இடத்தின் கீழே தோண்டப்பட்டபோது, மீண்டும் சுமார் 2½ அடி உயரமுள்ள அம்மன் சிலை, ½ அடி உயரத்தில் பைரவர் சிலை மற்றும் முகம் சேதமடைந்த நிலையில் நாயன்மார்கள் சிலை கிடந்தது.

    அந்த சிலைகள் சிதைந்து விடாத வகையில் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. இது குறித்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் சிலைகளை மீட்டு சென்றனர்.

    தற்போது மீட்கப்பட்டுள்ள சிலைகள் 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம் எனவும், உலோகத்தால் செய்யப்பட்ட அவை ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அவற்றினை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் அவை எந்த காலத்தில், எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்பது தெரியவரும்.

    அறந்தாங்கி அருகே சிலைகள் தோண்டியெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவவே, பொதுமக்கள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அம்மன் சிலைகள், பைரவர் சிலை, நாயன்மார்கள் சிலை, பலி பீடம், அடி பீடம் ஆகியவை மீட்கப்பட்ட பகுதியில் இன்னும் பல்வேறு சிலைகள் புதைந்து கிடக்கலாம். ஏனென்றால் அப்பகுதியில் பழமைவாய்ந்த சிவன்கோவில் இருந்துள்ளது. மேலும் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்கான தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களும் புதைந்து கிடக்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் அப்பகுதி முழுவதும் அகழ் ஆராய்ச்சி மேற்கொண்டு மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் புதையல்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×