search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் தொழில் அதிபர்களுக்கு மிரட்டல் - நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்
    X

    விருதுநகரில் தொழில் அதிபர்களுக்கு மிரட்டல் - நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம்

    விருதுநகரில் சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிடுவதாக கூறி தொழில் அதிபர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டக் கூடாது என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
    விருதுநகர்:

    இன்றைய நவீன உலகத்தில் தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்கள் உதவுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இதில் சிலர் அவதூறு கருத்துக்கள், வீடியோ பரப்புவதால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன.

    குறிப்பாக சட்டம்- ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டுப்போய் வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை தானா? என்பதை அறிவதற்குள் அடி-தடியில் இறங்கி விடுகின்றனர்.

    எனவே சமூக வலை தளங்களில் அவதூறு செய்திகளை கட்டுப்படுத்திட தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னை பற்றிய அவதூறு வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. இதனை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு மேற்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சூழலில் மேற்கு போலீசில் மேலும் 2 தொழில் அதிபர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நண்பர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நாங்கள் நடனமாடினோம்.

    அதனை 3 பேர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறு செய்திகளால் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போகும் அளவுக்கு விளைவுகள் ஏற்படுகிறது.

    எனவே இது வி‌ஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. பாரபட்சமற்ற நடவடிக்கையால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, குற்றங்களும் தடுக்கப்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×