search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பறக்கும் படை பெயரில் ரூ.1 கோடி கொள்ளை?-போலீசார் விசாரணை
    X

    சென்னையில் பறக்கும் படை பெயரில் ரூ.1 கோடி கொள்ளை?-போலீசார் விசாரணை

    சென்னையில் தேர்தலை பயன்படுத்தி பறக்கும் படை என்ற பெயரில் ரூ.1 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiRobbery
    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் இயங்கி வரும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதயகுமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வேப்பேரியில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தொழில் ரீதியாக 1 கோடியே 7 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.

    பணத்துடன் அவர் காரில் சென்று கொண்டிருந்தார். காருக்குள் அவருடன் டிரைவர் மற்றும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரும் இருந்தனர்.

    சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் முன்னே சென்று மறித்து தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தங்களை தேர்தல் அதிகாரி என்று கூறிக் கொண்டனர்.

    காரை சோதனையிட வேண்டும் என்று சொல்லி சோதனையிட்டனர்.

    அப்போது கட்டுமான நிறுவனத்துக்காக வாங்கியிருந்த ரூ.1 கோடி பணம் இருப்பதை கண்டு பிடித்தனர். அதை எடுத்துக் கொண்ட அந்த நபர்கள் இந்த பணத்துக்கு உரிய கணக்கை காட்டுங்கள் என்று கேட்டனர்.

    பிறகு அவர்கள் ரூ.1 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு உதயகுமாரை தங்களது காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூந்தமல்லி அருகே சென்றபோது அவர்கள் உதயகுமாரை அடித்து உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    அதன் பிறகே உதயகுமாருக்கு தேர்தல் பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றி ரூ.1 கோடியை பறித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி உதயகுமார் சைதாப்பேட்டை போலீசில் நேற்று இரவு புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உண்மையிலேயே பறக்கும் படை என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.1 கோடியுடன் தப்பி சென்றார்களா? என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. #ChennaiRobbery
    Next Story
    ×