search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருவெண்ணைநல்லூர் அருகே மாணவி கடத்தல்- 5 பேர் கொண்ட கும்பல் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே மாணவி கடத்தல்- 5 பேர் கொண்ட கும்பல் கைது

    திருவெண்ணைநல்லூர் அருகே மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடுகளை சூறையாடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 22). இவர் கடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் தினமும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவந்தனர்.

    இவர்கள் கடந்த 21-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றனர். அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை மாணவர் திருமூர்ததி கடத்தி சென்று விட்டார். கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு கொடுக்கும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வந்தனர். மாணவி கடத்தப்பட்டு 4 நாட்கள் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று மதியம் மாணவியின் உறவினர்கள் சுமார் 15 பேர் ஒன்று திரண்டனர்.

    பின்பு அவர்கள் ஆனத்தூர் காலனிக்கு சென்று அங்கிருந்த வீடுகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஒரு மினி லாரியின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பின்னர் காலனிபகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, உளுந்தூர்பேட்டை இன்ஸ் பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் விரைந்து சென்றனர்.

    இதற்கிடையே இந்த தகவல் தெரியவந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வீடுகளை சூறையாடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வீடுகளை சூறையாடிய மதுசூதனன் (வயது 31), இளையராஜா (26), புருஷோத்தமன் (27), தேவ நாதன் (43), வேலு (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆனத்தூர் காலனி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 100-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×