search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரட்டூர்-அயப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
    X

    கொரட்டூர்-அயப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

    191 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    “தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017” மற்றும் அதற்கான விதிகள் இன்றுமுதல் அறிவிக்கை செய்யப்பட்டு, அமல்படுத்தப்படுகிறது.

    இச்சட்டத்தினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தவும், பொது மக்கள் எளிதாக பின்பற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட www.tenancy.tin.goc.in என்ற வலைதளத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்த வலைதளத்தில், சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இப்புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். வாடகை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாடகை விதிக்கப்படும். குத்தகை விடுபவர் 3 மாத வாடகையை முன்பணமாக பெறமுடியும்.

    இப்புதிய “தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம், 2017” புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

    வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அயப்பாக்கம் திட்டப்பகுதியில் 2.45 ஏக்கர் பரப்பளவில் 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 336 குறைந்த வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    கொரட்டூர் திட்டப் பகுதியில் 1.45 ஏக்கர் பரப்பளவில், 54 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 222 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகள், ஒசூர் புறநகர் திட்டப் பகுதி 15ல் 4.04 ஏக்கர் பரப்பளவில், 19 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 90 வீடுகள்; ஈரோடு மற்றும் வேலூர் டோபிகானா திட்டப் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 191 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருநெல்வேலி, விருதுநகர், கடலூர், திருவாரூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 332 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலைப் பணி, 4 ஆற்றுப்பாலங்கள் மற்றும் ரெயில்வே கடவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    திருப்பூர் மாநகரத்தில் 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் 69 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையக் கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    மேலும், 11 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 காவலர் குடியிருப்புகள், 5 காவல் நிலையங்கள், ஒரு காவல் துறை கட்டடம், ஒரு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சிவகங்கையில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ், சீருடை பணியாளர்களுக்காக சிவகங்கை வட்டம், பையூர் பிள்ளைவயல் கிராமத்தில் 44 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 201 வீடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

    தமிழ்நாடு காவல் துறையின் தொழில்நுட்ப சேவைகள் பிரிவில் காலியாகவுள்ள உதவி ஆய்வாளர் (தொழில்நுட்பம்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 234 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 13 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்களையும் காணொளிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 126 கோடியே 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்களையும் திறந்து வைத்தார். #TNCM #EdappadiPalaniswami
    Next Story
    ×