search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு
    X

    கவர்னரிடம் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தவர் அன்புமணி ராமதாஸ் - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

    தமிழக அமைச்சர்கள் குறித்த ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை கவர்னரிடம் அன்புமணி ராமதாஸ் ஆதாரத்துடன் வழங்கியவர் என கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். #KSAlagiri #Anbumaniramadoss
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 24-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு நிற்கின்றன.

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட 9 இடங்களையும், புதுச்சேரியில் ஒரு இடத்தையும் வாய்ப்பு வழங்குகிற வரலாற்றுப் புகழ்மிக்க ஒப்பந்தம் நேற்று கையொப்பமிடப்பட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டில் தி.மு.கழகத்தோடு தொடங்கிய லட்சியப் பயணம் இடையில் ஓரிரு ஆண்டுகளைத் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக கொள்கை அடிப்படையில் பீடுநடை போட்டு வருகின்றன.

    2004, 2009 பாராளுமன்றத் தேர்தல், 2011, 2016 சட்ட மன்றத்தேர்தல் என தி.மு.கழகத்தோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் வழி வகுத்துள்ளது.

    நெஞ்சை உயர்த்தி நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி, லட்சியக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும். ஆனால் நம்மை எதிர்க்கிற கட்சிகளின் நிலை என்ன ? கொள்கை என்ன ? கடந்த கால அரசியல் அணுகுமுறை என்ன?

    கடந்த டிசம்பர் மாதம் 9-ந் தேதி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை ஆதாரத்துடன் வழங்கியவர் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். அந்த ஊழல் பட்டியலில் முதலாவது குற்றச்சாட்டு தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூபாய் 7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.



    பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூபாய் 320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி 24 ஊழல் பட்டியலை பாட்டாளி மக்கள் கட்சி வழங்கியது. பட்டியல் வழங்கி 70 நாட்களுக்குள்ளாக எந்த அ.தி.மு.க. மீது ஊழல் பட்டியல் ஆளுநரிடம் வழங்கப்பட்டதோ, அந்த ஊழல் கட்சியோடு கைகோர்த்து இன்றைக்கு பா.ம.க. நிறுவனர் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறார். சந்தர்ப்பவாத அரசியலில் இன்றைக்கு ராமதாஸ் கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார்.

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து சந்தர்ப்பவாதிகளின் கூடாரம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால் மதச்சார்பற்ற, சமூகநீதியில் அக்கறையுடன், தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொள்கை கூட்டணி அமைத்திருக்கின்றன. நமது கொள்கைகளை மக்களிடம் கூறுவோம்.

    அ.தி.மு.க., பா.ம.க.வின் சந்தர்ப்பவாத அரசியலை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்துவோம்.

    கடந்த 2004-ல் தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி சேர்ந்த பா.ம.க. 5 இடங்களில் வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் கேபினட் அமைச்சராகவும், ஆர்.வேலு ரெயில்வே அமைச்சராகவும் பதவி வகித்தார்கள்.

    ஆனால் 2009 பாராளுமன்றத் தேர்தலிலே கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.க.வோடு சேர்ந்து 6 இடங்களில் பா.ம.க. போட்டியிட்டு அனைத்திலும் படுதோல்வி அடைந்தது.

    அத்தகைய தோல்வியை வருகிற 2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ம.க.வுக்கு வழங்கி உரிய பாடத்தை தமிழக மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை. 2004-ல் மதச்சார்பற்ற கூட்டணி பெற்ற வெற்றியைப் போல நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்கிற வெற்றியின் இலக்கை நோக்கி தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடங்கி விட்டது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #KSAlagiri #Anbumaniramadoss
    Next Story
    ×