search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி பின்வாங்கியது ஏன்? - பரபரப்பு தகவல்கள்
    X

    பாராளுமன்ற தேர்தலில் ரஜினி பின்வாங்கியது ஏன்? - பரபரப்பு தகவல்கள்

    வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த் திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியல் வருகையை அறிவித்தார்.

    கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். மாநிலம் முழுக்க அணிகள் பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். ஒரு ஆண்டாக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ரஜினி கட்சி தொடங்கி போட்டியிடுவார், அல்லது யாருக்காவது தனது ஆதரவை தெரிவிப்பார் என எதிர்பார்த்தனர். முக்கியமாக ரஜினி பா.ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார். ரஜினி போட்டி இல்லை என்று கூறியது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக கட்சி பணிகளை தொடங்கிய ரஜினி திடீர் என்று பின்வாங்கியதற்கான காரணங்கள் என்ன என்பது விவாதமாக மாறி இருக்கிறது. ரஜினி முடிவின் பின்னணி பற்றி நிர்வாகிகளிடம் கேட்டோம்.

    ‘இப்போது என்ன முடிவு எடுத்தாலும் அது பிற கட்சிகளுக்கு ஆதரவாக சென்று விடும், எதிர்காலத்தில் கட்சி தொடங்கும்போது அது நம் கட்சிக்கு பாதகமாக போய்விடும் என்று ரஜினி நினைக்கிறார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினியின் பேச்சில் அது எதிரொலித்தது. ரஜினி இன்னும் கட்சி தொடங்கவில்லை என்றாலும் கடந்த ஓர் ஆண்டாக தன்னை சுற்றி நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அவரை பாதித்துள்ளன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் வி‌ஷயத்தில் அவர் கூறியது முதல் பா.ஜனதா 4 மாநிலங்களில் அடைந்த தோல்வி வரை ரஜினியின் கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டன.

    தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ரஜினியை கடுமையாக விமர்சிக்க தொடங்கின. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் ரஜினியை முக்கிய நபராக பார்த்தாலும் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பில் இன்னும் ரஜினிக்கு முழு திருப்தி வரவில்லை. இன்னும் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு பூத் கமிட்டிகள் வலுவாக அமைக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் கட்சி தொடங்கினால் இந்த தேர்தலிலேயே நம் பலத்தை காட்டலாம் என்று மாவட்ட செயலாளர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

    ரஜினியோ இப்போது கட்சி தொடங்கி போட்டியிட்டாலோ ஆதரவு தெரிவித்தாலோ சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது ஏற்படும் பாதகங்களை பற்றி பேசி இருக்கிறார். இந்த ஆண்டு நடக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் நிச்சயம் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்காது. தமிழக தேர்தல் வரலாற்றை புரட்டி பார்த்தால் இது தெளிவாக தெரியும்.

    இப்போது வெல்லும் எம்.பி சீட்டுகளால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. 37 தொகுதிகளில் ஜெயலலிதா வென்றும் பயனில்லையே... தவிர கமல் தனித்து நிற்கிறார். அவருக்கு நடுநிலை வாக்குகள் எந்த அளவுக்கு விழுகின்றன என்பதை பார்ப்போம்.



    கமல்ஹாசன் மற்ற அரசியல் கட்சிகள் போல் கூட்டணி, பணத்தை நம்பாமல் போட்டியிடுவது நம் எதிர்காலத்தை கணிப்பதற்கான நல்ல வாய்ப்பு. நாமும் போட்டியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். இப்போது கட்சி தொடங்கினால் இன்னும் 3 ஆண்டுகள் தாக்கு பிடிக்க வேண்டும்.

    சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினால் போதும். அதுவரை அமைதியாக கட்சிக்கான கட்டமைப்பை பலமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தலாம். அதுதான் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல ஒரே வழி என ரஜினி கருதுகிறார்.

    ரஜினியை பொறுத்தவரை இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக ஆளுங்கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போட்டியோ ஆதரவோ தெரிவித்தால் நிச்சயம் பகைத்துக்கொள்ள வேண்டி வரும். மேலும் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் கட்சிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். அது நமக்கு சாதகமாக அமையும் என ரஜினி தெளிவாக திட்டமிடுகிறார்’ என்றனர்.

    ரஜினியின் வாக்குகள் எங்கே போகும்? என்று கேட்டதற்கு ‘ரஜினிக்கு ரசிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் தான். எனவே அந்தந்த கட்சிகளுக்கு தங்கள் விருப்பப்படி வாக்கு அளிப்பார்கள். கட்சி தொடங்கும் வரை இப்படியே தொடர்வார்கள்.

    ரசிகர்களிடம் எந்த குழப்பமும் இல்லை’ என்று பதில் அளித்தனர். நிர்வாகிகள் இப்படி கூறினாலும் ரசிகர்களிடம் ஒருவித குழப்பம் நிலவுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி தனது ஆதரவை நிர்வாகிகள் மூலம் ரகசியமாக தெரிவிப்பார். அந்த கட்சிக்கு ஓட்டு போடுவோம் என்கின்றனர்.

    ரஜினியின் இந்த முடிவை வைத்தே ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுப்பதில் அரசியல் கட்சிகளுக்குள் போட்டி நிலவுகிறது. நிர்வாகிகளுக்கு ஆங்காங்கே பேரம் பேசப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. #Rajinikanth #RajiniMakkalMandram
    Next Story
    ×