search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை ராணுவ படையினர் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
    X

    துணை ராணுவ படையினர் மீது தாக்குதல்: பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட வேண்டும் - அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

    துணை ராணுவ படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். #TNPolitical #JammuKashmir #CRPF
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்திய துணை ராணுவப்படையினரின் வாகன அணி வகுப்பு மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் துயரத்தையும், வேதனையையும் தருகிறது.

    இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் முயன்றதற்காக பாகிஸ்தானுக்கு பல்வேறு தருணங்களில் இந்திய படைகள் பாடம் புகட்டியுள்ளன. அதற்கு பிறகும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    இனி வரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது குறித்தோ, ஊக்குவிப்பது குறித்தோ நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ அளவிலும், ராஜிய அளவிலும் கடுமையான பாடம் புகட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இல்லை என்று ராணுவ மந்திரி சொல்லிவந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவு ராணுவத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் நிலையில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அழிக்க மத்திய அரசு தயங்கக்கூடாது. மத்திய அரசின் முயற்சிக்கு இந்த தேசமே எழுந்து வந்து உறுதுணையாக இருக்க வேண்டும். பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த துணை ராணுவப்படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோர் உள்பட 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருத்தம் அளிக்கிறது. இச்செய்தி நாடு முழுவதும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை த.மா.கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது. இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது.

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய ராணுவம் முன் வரவேண்டும். இந்து முன்னணி, தமிழக முழுவதும் கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தனை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், ‘வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும், கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது’ என்றார். #TNPolitical #JammuKashmir #CRPF
    Next Story
    ×