search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு தகவல்
    X

    சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை - ஐகோர்ட்டில் அரசு தகவல்

    சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. #ChinnathambiElephant
    சென்னை:

    கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டாலும் அது அங்கு இருக்காமல் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி உள்ளது.

    இதையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து “சின்னதம்பி பாதுகாப்பு குழு” என்ற பெயரில் தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த 31-ந்தேதி காட்டுப்பகுதியில் இருந்து மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறது. தற்போது உடுமலை அருகே மயில்வாடி என்ற இடத்தில் சின்னதம்பி யானை தஞ்சம் புகுந்துள்ளது. ஊரை எட்டியுள்ள பகுதிகளில் நடமாடினாலும் யானை இதுவரையில் யாரையும் தாக்கவில்லை.

    தனது ஆக்ரோ‌ஷத்தையும் காட்டவில்லை. இதனால் அதன் போக்கிலேயே யானையை விட்டு 80-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். யானை நடமாட்டத்தை அறிய அதன் முதுகில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலரான அருண் பிரசன்னா என்பவர் சின்னதம்பி யானைக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

    ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு ஆஜரான அவர், கும்கி யானையாக சின்னதம்பி யானையை மாற்றினால் அது சித்ரவதை செய்யப்படும். இதனால் யானை பலியாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுபற்றி முறைப்படி மனு அளியுங்கள். இன்று பிற்பகலிலேயே விசாரணை நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

    அதன்படி பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    2 கும்கி யானைகள் மூலம்  சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.  #ChinnathambiElephant
    Next Story
    ×