search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு அவதூறு வழக்கு: தினகரன் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்
    X

    தமிழக அரசு அவதூறு வழக்கு: தினகரன் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்

    தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறப்பு கோர்ட்டில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஆஜரானார். #TTVDhinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு கரூரில் பொதுக்கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு இருந்து மக்களை ஏமாற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தினகரன் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல். ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜெ.சாந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம், வழக்கின் நகல் வழங்கப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 4-ந்தேதிக்கு நீதிபதி சாந்தி தள்ளிவைத்தார்.

    சிறப்பு கோர்ட்டில் தினகரன் ஆஜரானதை தொடர்ந்து, அ.ம.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்து இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியில் வந்த தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, “ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தை தடுக்க நினைக்காமல் தமிழக அரசு பேச்சு நடத்த முன்வர வேண்டும்” என்றார். #TTVDhinakaran

    Next Story
    ×