search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெக்கானிக் கொலையில் மனைவி கைது - போதையில் தகராறு செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்
    X

    மெக்கானிக் கொலையில் மனைவி கைது - போதையில் தகராறு செய்ததால் கொன்றதாக வாக்குமூலம்

    விளாத்திகுளம் அருகே குடி போதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்ததாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.வேடப்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38), மெக்கானிக். விவசாய வேலையும் செய்து வந்தார்.

    இவரது மனைவி மாயச்செல்வி (34). இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 14 வருடங்கள் ஆகிறது. சுஜிதா (13) என்ற மகள் உள்ளார்.

    பாலமுருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் மதுகுடித்து விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு பாலமுருகன் மது குடித்துவிட்டு வந்து மாயச்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த மாயச்செல்வி, அங்கு இருந்த இரும்பு கம்பியால் பால முருகனின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பால முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, கணவனை கொலை செய்ததாக மாயச்செல்வியை கைது செய்தனர். கைதான மாயச்செல்வி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்," எனது கணவர் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்து வந்தார்.

    சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்தே காலத்தை கழித்தார். இதனால் அவரை கண்டித்தேன். ஆனாலும் அவர் கேட்கவில்லை. நேற்று இரவு மதுகுடித்துவிட்டு வந்து என்னிடம் வாக்குவாதம் செய்தார்.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை அடித்து கொலை செய்தேன்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    Next Story
    ×