search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 இடங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்
    X

    வேலூர்- திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 இடங்களில் ஜாக்டோ-ஜியோ போராட்டம்

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடந்தது. வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஜாக்டோ-ஜியோ மாநில நிதி காப்பாளர் சேகர் தலைமையில் நடந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    காட்பாடியில் மாநில தலைமை குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் அஜிஸ்குமார், குப்புராமன், ஆண்டாள், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், செல்வகுமார், பாபு, ஆறுமுகம், குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், அரக்கோணம், ஆற்காடு, வாலாஜா, நெமிலி ஆகிய இடங்களில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஏராளமான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தனர்.

    அணைக்கட்டில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் 13 ஆசிரியர்கள் பங்கேற்றதாக ஜாக்டோஜியோ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளிகளில் பணிகள் பாதிக்கபட்டது.

    சில தொடக்க பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்க சென்றதால் பள்ளிக்கு பூட்டு போடபட்டது. அரசு அலுவலர்கள் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கபட்டன.

    திருவண்ணாமலையில் ஜாக்டோஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அண்ணா சிலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்,

    இதே போல் போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். #tamilnews
    Next Story
    ×