search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 5 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைதான 5 பேரை படத்தில் காணலாம்.

    திருச்செங்கோடு காரை வழிமறித்து டிரைவர் வெட்டிக்கொலை

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காரை வழிமறித்து டிரைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் கைதான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40), கார் டிரைவர்.

    கடந்த 15-ந் தேதி இவர் காரில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரிமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வராஜ் (28), விக்னேஷ்வரன் (26) என்பதும், இவர்கள் சிலருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் உடனே போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் முன்பு திருச்செங்கோட்டை சேர்ந்த சங்கீத்குமார் (34), ஆம்னி ராஜா (30), அய்யாவு (34) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் திருச்செங்கோடு டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் திருச்செங்கோடு பகுதியில் நடந்த 2 கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதும், கடந்த 2012-ம் ஆண்டு திருச்செங்கோட்டில் மீனாட்சி சுந்தரம் கொலையை முன்னின்று நடத்தியதும் தெரிய வந்தது.

    மேலும் கைதான 5 பேரும் போலீசாரிடம் கூறுகையில், சுரேஷ்குமார் எதிர்கோஷ்டியுடன் சேர்ந்து அடிக்கடி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் எங்களை பாதுகாக்கும் வகையில், ஆட்டோ மற்றும் காரில் சென்று சுரேஷ்குமார் சென்ற காரை வழி மறித்து அவரை வெட்டி கொலை செய்ததாகவும் வாக்கு மூலத்தில் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது கைதான 5 பேரும் சுரேஷ்குமாருக்கு எதிரான கும்பலில் இருந்து கொண்டு பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×