என் மலர்
செய்திகள்

வேப்பேரியில் நகை வியாபாரி கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
சென்னை:
திருச்சியை சேர்ந்தவர் ரங்கநாதன். நகை வியாபாரியான இவர் கடந்த மே மாதம் வேப்பேரி போலீஸ் நிலையம் அருகே ஈ.வி.கே.சம்பத் சாலை மகாவீர் காலனி பகுதியில் நகைகளுடன் சென்றார்.
அப்போது ஒரு கும்பல் அவரை தாக்கி 500 கிராம் நகையை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக வேப்பேரி போலீசார் கொள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ரங்கநாதன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் பதிவு செய்தனர்.
இந்த கொலை - கொள்ளையில் தொடர்புடைய பிராட்வேயை சேர்ந்த ரகுமான் பாஷா கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரகுமான் பாஷாவை போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது இந்த கொலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த இம்ரான்கான், சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பயாசுதீன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இம்ரான்கான், பயாசுதீன் ஆகிய இருவரையும் இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர். கொலை- கொள்ளை நடந்து 8 மாதங்களுக்கு பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.