search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிண்டி ரெயில் நிலையத்தில் மறியல் செய்த தொழிலாளர்கள்
    X
    கிண்டி ரெயில் நிலையத்தில் மறியல் செய்த தொழிலாளர்கள்

    2வது நாளாக வேலைநிறுத்தம் - சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சுமார் 1500 பேர் கைது

    மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்று ரெயில் மறியல் போன்ற ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயம் ஆக்க கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 12 மத்திய தொழிற்சங்கங்கள் மாநில அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக நேற்று ஏராளமான அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்த ஊழியர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். 2-வது நாளாக இன்று இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    பெரம்பூரில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. காலை 11 மணியளவில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் பெரம்பூர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

    போலீசார் தடையை மீறி சில தொண்டர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள்.

    அவர்களுடன் போலீஸ் இணை கமி‌ஷனர் விஜயகுமாரி பேச்சு வார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து ரெயில் மறியல் நடந்தது.

    பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான மின்சார ரெயில் முன்பு மகேந்திரன் தலைமையில் தொழிற்சங்கத்தினர் மறியல் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இந்த மறியலில் ஈடுபட்ட மு.சம்பத், சிவகுமார், சுந்தர்ராஜன் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் ஆர்.சவுந்தரராஜன் தலைமையில் கிண்டியில் ரெயில் மறியலில் ஈடுபட ரேஸ்கோர்ஸ் அருகில் திரண்டனர். சுமார் 750 பேர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை உள்ளே விடாமல் தடுக்க போலீசார் தடுப்பு வேலி வைத்து இருந்தனர். பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீசாரை மீறி மறியல் செய்ய உள்ளே நுழைய முயன்ற போது போலீசாரும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையில் 50-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மின்சார ரெயிலில் பயணம் செய்து மறியலில் ஈடுபட்டனர்.

    கடற்கரை-தாம்பரம், தாம்பரம்-கடற்கரை மார்க்கமாக சென்ற 4 மின்சார ரெயில்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 10 நிமிடங்களுக்கு மேலாக மறியலில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பீம்ராவ் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சமூதாய கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    போராட்டம் குறித்து, சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிறகும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் அடுத்த கட்டமாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தீவிர தொடர் போராட்டத்தை முன் எடுத்து செல்வோம்.

    தமிழகம் முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி, எல்.ஐ.சி., தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

    மத்திய அரசின் அனைத்து துறைகளும் 2 நாட்களாக முடங்கியுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அண்ணாசாலையில் தொமு.ச., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.சிடி.யூ, எம்.எல்.எச், ஆகிய தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர் உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. கங்காதரன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் மீஞ்சூர் நேரு சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னேரி - மீஞ்சூர், மீஞ்சூர் - திருவொற்றியூர் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    Next Story
    ×