என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் ஊராட்சி சபை கூட்டம்- தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
சென்னை:
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் 238 ஊராட்சிகளில் இன்று மாலை ஊராட்சி சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்’ என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் சென்று இன்றைய பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, மக்கள் விரோத மாநில அரசுகளின் மிக மோசமான செயல்பாடுகளை சொல்வதன் மூலமாக பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிட வேண்டும் என்று நம்முடைய தலைவர் மு.க. ஸ்டாலின் கட்டளையிட்டுள்ளார்.
காஞ்சீபுரம் வடக்கு மாவட்டத்தில் திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல் பட்டு, ஆலந்தூர் பகுதி, சோழிங்கநல்லூர் பகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அடங்கிய 238 ஊராட்சிகளில் ஊராட்சி வாரியாக சபை கூட்டங்கள் இன்று முதல் நடைபெற உள்ளது.
அந்தந்த ஒன்றியங்களுக்கு தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக பிரதிநிதிகள் இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
அதன்படி ஆதனூர், பிச்சிவாக்கம், மேவலளூர் குப்பம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், ஊனமாஞ் சேரி கோட்டூர், செல்லம் பட்டிடை, குணகரம்பாக்கம், எயையூர், தத்தனூர், பேரீஞ்சம்பாக்கம் பகுதிகளில் இன்று கூட்டம் நடைபெறுகிறது.
10-ந் தேதி கவுல்பஜார், கருநீலம், அஞ்சூர், குண்ண வாக்கம் ஆகிய ஊர்களில் கூட்டம் நடைபெறுகிறது.
11-ந் தேதி புலிபாக்கம், செட்டிபுண்ணி யம், வீராபுரம் பகுதிகளிலும், அதனை தொடர்ந்து 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் 21, 22, 23, 24, 25, 26, 27 ஆகிய தேதிகளிலும் பல்வேறு ஊராட்சிகளில் கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந் தேதி வரை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் தலைமை கழக பிரதிநிதிகளான எஸ்.ஜெகத்ரட்சகன், தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., காசிமுத்து மாணிக்கம், அசன் முகம்மது ஜின்னா பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தை பொது இடத்தில் ஆடம்பரம் இன்றி ஒலிபெருக்கி மட்டும் உபயோகித்து நடத்த வேண்டும். கூட்டம் தொடங்கும் முன்பு தலைமை கழகம் தரும் துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வினியோகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.